ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கு 52 படகுகள்
ராமநாதபுரம்: ஆழ்கடல் மீன் பிடிப்பிற்காக தமிழக மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை 52 படகுகளை வழங்கியுள்ளன. ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் இருந்து செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டுவதாக இலங்கை அரசால் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். 2024ல் மீன் பிடி தடைக்காலம் முடிந்த பின் ஜூன் 15 முதல் இதுவரை 204 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.86 பேர் இலங்கை சிறையில் தண்டனை கைதிகளாக உள்ளனர். பல படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நெருக்கடி மிகுந்த ஆனால் மீன்வளம் அதிகமுள்ள பகுதிகளில் பல படகுகள் செல்வதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு தீர்வுகாண ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு ஏற்ப சிறு கப்பல்கள் போல் படகுகளை மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மானிய விலையில் வழங்கியுள்ளன.ரூ.80 லட்சம் மதிப்பிலான இந்த படகுகளுக்கு மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசு 20 சதவீதம் என 70 சதவீதம் (ரூ.56 லட்சம்) மானியம், மீனவர்கள் பங்களிப்பு தொகையாக ரூ.8 லட்சம், ரூ.16 லட்சம் வங்கி கடனாக வழங்கப்பட்டது. இதுவரை 42 படகுகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த படகுகள் அனைத்திலும் ரெப்ரிஜிரேட்டர் சீ வாட்டர் சிஸ்டம் என்ற குளிர் பதன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஒரு படகில் 10 பேர் ஆழ்கடலில் 10 முதல் 15 நாட்கள் வரை தங்கி மீன் பிடிக்கலாம். ஆழ்கடல் மீன் பிடி படகுகளில் கேரள மாநிலம் கொச்சி பகுதியிலும், தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியிலிருந்தும் தொழில் செய்கின்றனர். இவை தவிர 50 சதவீதம் மாநில அரசு மானியம் தலா ரூ.60 லட்சத்தில் 10 படகுகள் ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கு வழங்கப்பட்டுள்ளன.மீனவர்கள் ரூ.30 லட்சம் செலுத்தினால் இந்தப்படகு வழங்கப்படுகிறது. இதுவரை 10 படகுகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மண்டபம் பகுதியில் கட்டப்படுகின்றன.மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு மாற்று திட்டங்களை வழங்கினாலும் இலங்கை பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்து கைது செய்யப்படும் நிலை தொடர்கிறது.