மீனவர்கள் 7 பேருக்கு செப். 17 வரை காவல்
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு செப்.,17 வரை சிறைக் காவலை நீட்டித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூலை 12ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஈசக்பவுல் என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படை வீரர்கள் சிறைபிடித்து அதில் இருந்த 7 மீனவர்களை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். 4வது தடவையாக நேற்று மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை செப்., 17 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்களை மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் போலீசார் அடைத்தனர்.