அப்பா தீவுக்குள் அனுமதியின்றி சென்ற 8 பேருக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம்
கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மன்னார் வளைகுடா கடலில் இருந்து 12 நாட்டிக்கல் கடல் மைல் (22 கி.மீ.,) தொலைவில் உள்ள அப்பா தீவிற்குள் சென்ற ஆறு கல்லுாரி மாணவர்கள் உட்பட 8 பேருக்கு வனத்துறையினர் ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்தனர்.கீழக்கரை மன்னார் வளைகுடா கடலில் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ஏழு தீவுகள் வரிசையாக குறிப்பிட்ட துாரத்தில் உள்ளன. கரையில் இருந்து 12 நாட்டிக்கல் துாரத்திலுள்ள அப்பா தீவிற்கு செல்ல திட்டமிட்ட கீழக்கரை கல்லுாரி மாணவர்கள் 6 பேர் மற்றும் பைபர் நாட்டுப்படகு டிரைவர்கள் இருவருடன் அனுமதியின்றி சென்றனர். 'ஆறு பேரும் அற்புதத் தீவும்' என்ற தலைப்பில் யூடியூப் சேனல் மூலம் அப்பா தீவுக்குள் நுழைந்து அங்குள்ள அழகிய வனப்பகுதிகளையும் மணற்பரப்பையும் தீவுகளை சுற்றி பவளப்பாறை உள்ள இடங்களையும் யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளனர். ஜன.,19ல் தீவுக்கு சென்று விட்டு சத்தம் இல்லாமல் ஊர் திரும்பினர். பின்னர் தங்களது யூடியூப்பில் அதனை வீடியோவாக வெளியிட்டு பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ பரவியது. இதுகுறித்து கீழக்கரை வனச்சரகத்தில் புகார் அளிக்கப்பட்டது.கீழக்கரை வனச்சரக அலுவலர் செந்தில் குமார், வனவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் கீழக்கரையை சேர்ந்த 6 மாணவர்கள் மற்றும் படகு ஒட்டிச் சென்ற இருவரையும் விசாரணைக்கு அழைத்து ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 8 பேருக்கு ரூ.80ஆயிரம், படகிற்கு ரூ.20 ஆயிரம் என ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்தனர்.வனச்சராக அலுவலர் செந்தில்குமார் கூறுகையில்,''தீவுகளுக்கு செல்வது சட்டப்படி குற்றம். அப்படி செல்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் யாரும் தீவை சுற்றிப் பார்க்க உள்ளே செல்லலாம் என்ற எண்ண கூடாது,'' என்றார்.