ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்தவமனை வளாகத்திற்குள் போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்தவர் முத்து 36. மண் அள்ளும் இயந்திர ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவர் ஆக.,27 இரவு 10:00 மணிக்கு வீட்டில் பாத்ரூம் சென்ற போது தலைசுற்றி கீழே விழுந்து விட்டார். இதனால் காயமடைந்த அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நரம்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (செப்.,1) மதியம் 12:00 மணிக்கு தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். அதைபார்த்த அவரது மனைவி நந்தினி பணியில் இருந்த நர்சிடம் தெரிவித்துள்ளார். அவரை பரிசோதித்த நர்ஸ் டாக்டரிடம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். அன்று இரவு 7:00 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்ற நிலையில் முத்து இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் டாக்டர்கள் சரியாக பணிபுரியாததே முத்து இறப்பிற்கு காரணம். மதியம் 12:00 மணிக்கு வாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் இரவு 7:00 மணி வரை டாக்டர்கள் வரவில்லை என அவரது உறவினர்கள் மருத்துவமனை வாசலில் போராட்டம் நடத்த முயன்றனர். அங்கு வந்த போலீசார் அனைவரும் கலைந்து சென்று வளாகத்திற்குள் போராட்டம் நடத்துமாறு அறிவுறுத்தினர். உடனே அனைவரும் பிரேத பரிசோதனை அறை முன்பு காலை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் வரை போராட்டம் நடத்துவோம் என்றனர். கேணிக்கரை போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பின் முத்துவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டது. இதுகுறித்து மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் அமுதா ராணி கூறுகையில் காலையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். மதியம் டாக்டர்கள் இருந்துள்ளனர். நோயாளி நன்றாகத்தான் இருந்துள்ளார். தலைக்காயம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் அவசர சிகிச்சை தேவைப்படும். இரவு அந்த நிலை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டார் என்றார்.