வருமானத்தின் ஒரு பகுதி தண்ணீருக்கே போகுது அச்சங்குடி கிராம மக்கள் வேதனை
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே லாந்தை ஊராட்சி அச்சங்குடி கிராமத்தில் தண்ணீருக்காக வருமானத்தின் ஒரு பகுதி செலவிடப்படுவதாக மக்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தனர்.லாந்தை ஊராட்சிக்கு உட்பட்ட அச்சங்குடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊருணி அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட திறந்தவெளி கிணறு உள்ளது. அந்த கிணற்றிலிருந்து தண்ணீர் வசதி பெற முடியாத நிலை தற்போது வரை தொடர்கிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஜல்ஜீவன் திட்ட பணிகளுக்கான குழாய்கள் தண்ணீர் வரத்தின்றி காட்சி பொருளாக உள்ளது. அச்சங்குடி கிராம மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலானோர் விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ளனர்.இங்கு குளிக்கவும், பாத்திரங்கள் கழுவவும் இதர புழக்கத்திற்கான தண்ணீரை குடம் ரூ. 5க்கு டிராக்டர் மூலம் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அது போக குடிநீரை ரூ. 12க்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். தண்ணீருக்காக ஒரு நாளைக்கு ரூ.50 முதல் 100 வரை செலவிட வேண்டி உள்ளது. சில நேரங்களில் டிராக்டருக்காகவும் காத்திருக்க வேண்டியது உள்ளது.இந்நிலையில் அச்சங்குடி ஊருணி கரையோரம் திறந்தவெளி பெரிய கிணறு உள்ளது. அவற்றின் அருகே மின்கம்பத்தின் மூலம் மின் மோட்டாரை அமைத்து அங்கிருந்து பைப்லைன் மூலமாக கிராம மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்தால் பெரும் உதவியாக இருக்கும். தண்ணீர் பிரச்னையால் இப்பகுதியில் வசிக்கக்கூடிய கிராம மக்கள் ராமநாதபுரம் நகர் பகுதிகளில் குடியேறும் நிலைக்கு வந்துவிட்டனர்.எனவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் திறந்த வெளியில் உள்ள கிணற்றை உரிய முறையில் கிராம மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு செய்தால் வருடம் முழுவதும் இப்பகுதியில் தண்ணீர் பிரச்னைக்கு வாய்ப்பு இருக்காது. எங்களுக்கும் வருமானத்தின் பெரும் பகுதி செலவிட வேண்டி இருக்காது. எனவே மாவட்டம் நிர்வாகம் எங்களின் கோரிக்கையை செவி சாய்க்க வேண்டும் என்றனர்.