மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் அமாவாசை பூஜைகள்
26-Jun-2025
ராமநாதபுரம்: ஆடி வெள்ளியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.ராமநாதபுரம் அல்லிகண்மாய் ரோட்டில் உள்ள ராஜமாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு அபிேஷகம், பூக்களால் பூச்சொரிதல் அலங்கராத்தில் தீபாராதனை நடந்தது.பக்தர்களுக்கு கூல் பிரசாதம் வழங்கப்பட்டது. இதுபோன்று ராமநாதபுரம் வடக்குதெரு திரவுபதி அம்மன் கோயில், ரயில்வே பீடர் ரோடு வெட்டுடையாள் காளியம்மன்கோயில், கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் உள்ள மல்லம்மாள் காளியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயிலில் அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. வாலாந்தரவை அண்ணாநகரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் அபிேஷக பூஜை நடந்தது. கூல் காய்ச்சி பக்தர்கள் வழிபட்டனர். உத்தரகோசமங்கை
வராகி அம்மன் கோயிலில் ஆடி பூச்சொரிதல் விழாவில் மூலவர் வராகி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் தொடர்ந்து நடந்தது. ஏராளமானவர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தி உத்தரகோசமங்கை நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தனர். பின்னர் பாலாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு சிம்ம வாகனத்தில் உற்ஸவ மூர்த்தி அம்பாளின் வீதி உலா நடந்தது. வண்ணாங்குண்டு அருகே குச்சிலிய மடத்து மகா முனீஸ்வரர் கோயிலில் உள்ள மகாகாளியம்மனுக்கு 11 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கோயில் முன் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பரமக்குடி
நயினார்கோவில் சவுந்தரநாயகி, நாகநாதசுவாமி நேற்று முதல் ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் யாத்திரையாக நடந்து சென்று கோயிலில் விளக்கேற்றி வழிபட்டனர்.முத்தாலம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு கூழ் ஊற்றி பெண்கள் வழிபட்டனர். சின்ன கடை தெரு துர்க்கை அம்மன், சாத்தாயி அம்மன், வராகி அம்மன், பத்ரகாளியம்மன் என அனைத்து கோயில்களிலும் வழிபாடு நடந்தது. திருவாடானை
சிநேகவல்லி அம்மன், திருவெற்றியூர் பாகம்பிரியாள் மற்றும் கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோயில்களில் நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. பெண்கள் அம்மன் பக்தி பாடல்களை பாடினர். திருவெற்றியூருக்கு வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர். ஆர்.எஸ். மங்கலம்
அரசாள வந்த அம்மன் கோயிலில், மூலவர்கள் அரசாள வந்த அம்மன், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில், கைலாசநாதர் கோயில், உப்பூர் வெயில் வந்த விநாயகர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில், ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் பூஜைகள் செய்து வழிபட்டனர்.
26-Jun-2025