மேலும் செய்திகள்
விவசாயிகள் போர்வையில் மண் கடத்தல்
10-Sep-2024
சிக்கல்: கீழக்கிடாரம் கண்மாயில் அரசு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகளவு ஆழத்தில் மணல், மண் அள்ளும் போக்கு அதிகரித்துள்ளதாக விவசாயிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கண்மாய், ஊருணி மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் உள்ள மணல் மற்றும் சவடு மண்ணை அள்ளிக் கொள்வதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.எடுக்கப்படும் மண்ணைக் கொண்டு விவசாய நிலங்கள் மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளால் உரிய முறையில் அனுமதி அளிக்கப்பட்டு அவற்றினை கொண்டு மண் அள்ளும் இயந்திரம் மூலமாக மண் அள்ளி மண்ணின் தரத்திற்கு தகுந்தாற்போல் டிராக்டர்களில் ரூ.500 முதல் 1000 வரை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கீழக்கிடாரம் கண்மாயில் அரசு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகளவு ஆழத்தில் மண் அள்ளும் போக்கு தொடர்வதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.5 கி.மீ.,க்கும் அதிகமான சுற்றளவு கொண்டது கீழக்கிடாரம் பெரிய கண்மாய். 2750 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கீழக்கிடாரம் கண்மாய் பாசனம் மூலமாக விவசாயத்திற்கு தேவையான நீர் மற்றும் கிராம மக்களின் அத்தியாவசிய குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.கடந்த பருவ மழை காலத்தில் இக்கண்மாய் ஓரளவிற்கு தண்ணீர் நிரம்பி இருந்த நிலையில் வெயிலின் தாக்கத்தால் வற்றி உள்ளது. கீழக்கிடாரம் விவசாயிகள் லாசர், ஜேம்ஸ் ஆகியோர் கூறியதாவது: அரசு விதிமுறை மீறி கூடுதலாக மண் அள்ளும்போது கனிமவள கொள்ளையாக மாறுகிறது. 20 முதல் 25 அடி ஆழத்திற்கு மண் அள்ளி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் கண்மாயில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிப்பை சந்திக்கும், பள்ளங்களை கடந்து செல்லும் பொழுது கீழே விழுந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து கடலாடி வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அலுவலருக்கு புகார் தெரிவித்துள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக வெட்டி எடுக்கப்படும் இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்ய முன்வர வேண்டும் என்றனர்.
10-Sep-2024