| ADDED : மார் 20, 2024 12:21 AM
ராமநாதபுரம் : விவசாயிகள் அறுவடை செய்து சேமித்துள்ள நெல், சிறுதானிய விதைகளின் வீரியத்தை பராமரித்தால் இழப்புகளை தவிர்க்கலாம் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.ராமநாதபுரம் விதைச்சான்று உதவி இயக்குனர் சிவகாமி கூறியுள்ளதாவது: விதை சேமிப்பு என்பது அறுவடை செய்த காலம் முதல் அடுத்த பருவத்திற்கு நடவு செய்யும் வரை அதிகபட்ச முளைப்புத்திறன், புறத்துாய்மை மற்றும் வீரியம் ஆகியவற்றை பராமரித்தல் ஆகும். நெல் விதைக்கு 13 சதவீதம், பயிறு மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு 9 சதவீதமும் மற்றும் சிறுதானிய விதைகளுக்கு 12 சதவீதத்திற்கு மேல் இருந்தால் அவைகள்எளிதில் பூச்சி நோய் தாக்க வாய்ப்புள்ளது. எனவே புதிய கோணிப்பைகள் அல்லது சுத்தமான தீவன சாக்குகளை பயன்படுத்த வேண்டும். விதை சேமிக்கும் குதிர்கள், கிடங்குகளை சுத்தமாக பராமரித்தல் வேண்டும். குப்பை, துாசி, பூச்சி தாக்கிய விதைகளை அகற்ற வேண்டும். வேதியியல் முறையில் 1 கிலோ விதைக்கு 3 கிராம் என்ற அளவில் கால்சியம் குளோரைடு, கால்சியம் கார்பனேட் மற்றும் அரப்பு துாள் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்த கலவையினை பயன்படுத்தி விதையினை சேமித்து வைக்க வேண்டும். விதை மூட்டைகளை சீரான காற்றோற்றத்துடன் தரையில் அடுக்காமல் கட்டைகளின் மேல் அடுக்க வேண்டும். 15 நாட்களுக்கொருமுறை மூட்டைகளில் பூச்சி தாக்குதல் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். இவ்வாறு தரமான விதைகளை சேமிப்புக் கால இழப்பு இல்லாமல் சேமித்து பயன்பெறலாம் என்றார்.