பரமக்குடி ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் முன்பு அனைத்து இயக்கம், கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பரமக்குடி: பரமக்குடி ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தை மதுரைக்கு மாற்றும் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து இயக்கங்கள் மற்றும் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் நேற்று அலுவலகத்தில் இருந்த பொருட்களை தபால் துறையினர் மாற்றம் செய்யும் பணியை துவக்கினர். பரமக்குடி ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் 40 ஆண்டுகளாக பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகில் இயங்கி வருகிறது. இங்கு தற்போது 20 ஆயிரம் சாதாரண தபால்கள் உட்பட 2500க்கும் மேற்பட்ட விரைவு தபால்கள் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் பரமக்குடி சுற்று வட்டாரத்தில் 100 கி.மீ.,ல் வரும் தபால்கள் உடனுக்குடன் சென்றடைகிறது. இந்நிலையில் தபால் பிரிப்பகத்தை மதுரைக்கு மாற்றும் உத்தரவை அஞ்சல் துறை மேற்கொண்டது. இதனால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அனைத்து கட்சிகள், அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று காலை அனைத்து கட்சியினர் சார்பில் சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, துணைத் தலைவர் குணா உட்பட இரு கம்யூ.,க்கள், தி.மு.க., ம.தி.மு.க., காங்., வி.சி.க., ம.ம.க., உட்பட அனைத்து கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழக தலைவர் மாதவன் தலைமையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், வியாபாரிகள் சங்கம், இந்திய மருத்துவர்கள் சங்கம், லயன்ஸ் மற்றும் ரோட்டரி சங்கம், எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சமூக நலச் சங்கம் உள்ளிட்ட அனைத்து பொதுநல அமைப்பினர் திரளாக பங்கேற்றனர்.