நாளை வைகுண்ட ஏகாதசி திருப்புல்லாணியில் ஏற்பாடு
திருப்புல்லாணி: -நாளை (டிச.30) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயில் தெர்ப்பசயன ராமர் சன்னதி அருகே உள்ள சொர்க்கவாசல் கதவு மூலமாக பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடுகள் நடக்கிறது. இக்கோயிலில் பகல் பத்து மற்றும் ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது. நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தெர்ப்பசயன ராமர் சன்னதி அருகே உள்ள சொர்க்கவாசல் கதவு மூலமாக பரமபத வாசல் திறப்பு நிகழ்வு நடக்க உள்ளது. காலையில் கல்யாண ஜெகநாத பெருமாள் சயன திருக்கோலத்திலும், கண்ணாடி சேவை, விஸ்வரூப தரிசனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளும், விசேஷ திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவை நடக்கிறது. நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் ஆண்டாள் அருளிய பாசுரங்கள் கோயில் பட்டாச்சாரியார்களால் தொடர்ந்து பாடப்பட்டு வருகிறது. இரவு 7:00 மணிக்கு உட்பிரகார வீதியின் வழியாக வந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளிகிறார். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்கின்றனர்.