மழைக்கு முன்பாக பாத்திகளிலிருந்து உப்பு சேகரிப்பு ; டன் ரூ.2500க்கு வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பு
திருப்புல்லாணி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழைக்காலத்திற்குமுன்பாக உப்பளங்களில் உற்பத்தி செய்த உப்பை பாத்திகளில் இருந்து சேகரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. டன் ரூ.2500க்கு விருதுநகர், துாத்துக்குடி, சென்னை உள்ளிட்ட வெளியூறுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தேவிபட்டினம் ரோடு, திருப்புல்லாணி அருகே காஞ்சிரங்குடி, ஆனைகுடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெருவாரியாக உப்பளங்கள் உள்ளன. இங்கு பிப்., மாதம் துவங்கி செப்., மாதத்திற்குள்ளாக கோடை வெயிலின் தாக்கத்தால் விளைவிக்கப்படும் உப்புகள் தற்போது மழைக்கால முன்னெச்சரிக்கையால் விரைவில் சேகரிக்கப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி துவங்கியுள்ளது. ஆழ்துளை கிணறுகளின் இருந்து தெப்பத்தில் சேகரிக்கப்படும் உவர் நீர் முறையாக பாத்திகளில் தேக்கப்பட்டு வெயிலின் தாக்கத்தால் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்பு துாத்துக்குடி, விருதுநகர், ராஜபாளையம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முதல் தரமான உப்புகள் உணவு தேவைக்கும், அதற்கு அடுத்தபடியாக கிடைக்கக்கூடிய உப்புகள் உரத்தொழிற்சாலை, தோல் பதனிடும் தொழிற்சாலை, கருவாட்டு கம்பெனி உள்ளிட்டவைகளுக்கு லாரிகள் மூலமாக வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். டன் உப்பு ரூ. 2000 முதல் 2500 வரை விற்கிறது. அக்டேபரில் மழைக்காலம் துவங்குவதை முன்னிட்டு பாத்திகளின் ஓரங்களில் மிகுதியாக குவித்து வைக்கப்படும் உப்புகள் சேகரிக்கப்பட்டு லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கின்றனர். மழைக்காலத்திற்கு பிறகு பாத்திகளில் தேங்கும் உப்புகள் அகற்றப்பட்டு மீண்டும் அவற்றில் படிந்திருக்கும் ஜிப்சம் எனப்படும் வேதிப்பொருள்கள் எடுக்கப்பட்டு அவை தனியாக சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுகிறது. உரிய அளவில் அயோடின் சேர்க்கப்பட்டு உப்புகள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறது. சில இடங்களில் மழைநீரில் உப்பு கரைவதை தடுக்க தார்ப்பாயும், பனை ஓலையால் வேயப்பட்டும் பாதுகாக்கப்படுகிறது. ---