| ADDED : டிச 04, 2024 04:47 AM
கமுதி: கட்டாய பணிமாற்றம் செய்வதைக் கண்டித்து கமுதியில் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணியாளர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.கமுதியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு பணியாற்றும் சாலை பணியாளர்களை கட்டாயமாக வேறு பகுதிகளுக்கு அதிகாரிகள் பணிக்கு அனுப்புகின்றனர்.அவ்வாறு செல்லாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விழாக்காலங்கள், தேவர் குருபூஜை காலங்களில் சிறப்பு சாலை பணியாளர்களை நியமனம் செய்யாமல் பணியாளர்களை வைத்து வேலைகளை முடிக்கின்றனர். இதனை கண்டித்து 20க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்பு அலுவலக கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். சாலைப் பணியாளர் முருகன் கூறியதாவது: கடந்த 1997 மற்றும் 1999ம் ஆண்டு தமிழக முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு இருபுறங்களிலும் 4 கி.மீ., வரை சாலை ஓரத்தில் உள்ள முள் செடிகளை அகற்றி சுத்தப்படுத்துவது பணியாகும்.இந்நிலையில் கமுதி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் கட்டாயமாக வேறு பணிகளுக்கு அனுப்பியும், விழாக் காலங்களில் கூடுதல் பணி செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர். மேலும் பணியாளர்களுக்கு மண்வெட்டி, கடப்பாரை, ரெயின் கோட் உள்ளிட்ட எந்த உபகரணங்களும் வழங்கப்படவில்லை.கமுதி உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இரண்டு பிரிவாக செயல்பட்டு வரும் நிலையில் பணியாளர்கள் பற்றாக்குறையால் ஒரு பிரிவில் உள்ளவர்களை மற்ற பிரிவுக்கும் வேலைக்கு அனுப்புவதால் மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனால் தினமும் 10 கி.மீ வேலை பார்க்கும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.