பரமக்குடியில் குறுகிய இடத்தில் செயல்படும் பஸ் ஸ்டாண்ட்
நெரிசலில் பயணிகள் தவிப்புபரமக்குடி: பரமக்குடியில் பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்படுவதால் பயணிகள் நிற்பதற்கு கூட இடவசதியின்றி மழை, வெயிலில் தவிக்கும் நிலை உள்ளது. பரமக்குடியில் இருந்து 80க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படும் நிலையில் பல்வேறு கோட்டங்களில் இருந்து தினமும் பல நுாறு பஸ்கள் வந்து செல்கிறது. இங்கு மதுரை, ராமேஸ்வரம் பஸ்கள் நிறுத்துவதற்கு மட்டுமே ரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டவுன் பஸ்கள் உட்பட மற்ற தொலை துார பஸ்கள் நிற்பதற்கான இட வசதி இல்லை. இதனால் அடுத்தடுத்து வரும் பஸ்களை எதிர்பார்த்து பயணிகள் பஸ்கள் வரும் பாதையிலே காத்திருக்கும் நிலை உள்ளது. தொடர்ந்து பயணிகள் பஸ் வருகைக்காக ரேக்குகள் மற்றும் அதன் அருகில் பயணிகள் அமரும் இடம் இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் அவர்களின் உடைமை களுடன் பஸ்சுக்காக ஆங்காங்கே அலையும் நிலை இருக்கிறது. பரமக்குடியில் லட்சம் மக்களுக்கும் மேல் வசிக்கும் நிலையில் தினமும் பல ஆயிரம் பேர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்து செல்கின்றனர். ஆகவே பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பஸ் ஸ்டாண்டை மாற்று இடத்தில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பஸ் ஸ்டாண்ட் ராமநாதபுரம் ரோட்டோரம் உள்ள நிலையில், பஸ்கள் உள்ளே நுழையும் மற்றும் வெளியில் வரும் இடங்களிலும் ரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் பஸ் ஸ்டாண்டை விரிவு படுத்துவதுடன் தொலை துார பஸ்களை மாற்று இடங்களில் இருந்து புறப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.