கொசு வலை கூடாரத்தில் பாதுகாக்கப்படும் கால்நடைகள்
ஆர்.எஸ்.மங்கலம்,: ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடைகளை கொசுக்களிடம் இருந்து பாதுகாக்க விவசாயிகள் கொசுவலை கூடாரம் அமைத்துள்ளனர்.ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்போர் ஒவ்வொரு பகுதிவாரியாக சில நாட்கள் முகாமிட்டு கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக பருவமழை பெய்து வருவதால் கால்நடைகளை பாதுகாப்பது விவசாயிகளுக்கு சவாலாக உள்ளது.தற்போது பெய்து வரும் மழைக்கு ஆங்காங்கே தண்ணீர் தேங்கி அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் இரவில் கால்நடைகள் கொசுக் கடியால் பாதிப்படைகின்றன. இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்று மாலையில் திரும்பும் ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை கொசு வலையால் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் அடைத்து பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.