பாம்பன் பாலத்தில் சிசிடிவி சேதம்: பாதுகாப்பு கேள்விக்குறி
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் 'சிசிடிவி' கேமரா உடைந்து கிடப்பதால் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பாம்பன் கடலில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனத்தில் ராமேஸ்வரம் கோயில், தனுஷ்கோடிக்கு பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 37 ஆண்டுகளை கடந்த பாம்பன் பாலத்தில் இரவில் சமூக விரோதிகள் மது அருந்தி ரகளை செய்வதால் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. மேலும் பாலத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் பாலம் பலவீனமாகும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க பாலத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு 10 சிசிடிவி., கேமராக்கள் பொருத்தி பாம்பன் போலீசார் கண்காணித்தனர். ஆனால் காலப்போக்கில் கேமராக்களை பராமரிக்காமல் விட்டதால் தற்போது கேமராக்கள் உடைந்து பயன்பாடின்றி கிடக்கிறது. இதனால் பாலத்தில் தடை மீறி நிறுத்தும் வாகனங்கள், பாலத்தில் நடக்கும் சமூக விரோத செயல்களை கண்காணிக்க முடிவதில்லை. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சேத மடைந்த சிசிடிவி., கேமராக்களை சரி செய்து பாலத்தை கண்காணிக்க எஸ்.பி., சந்தீஷ் உத்தரவிட வேண்டும்.