உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  வேலைக்கு ஆள் கிடைக்காததால் கரி மூட்ட தொழில் பாதிப்பு

 வேலைக்கு ஆள் கிடைக்காததால் கரி மூட்ட தொழில் பாதிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: விவசாயப் பணியின் காரணமாக, கரி மூட்ட தொழிலுக்கு கூலி ஆட்கள் கிடைக்காததால் கரி மூட்ட தொழில் பாதிப்படைந்துள்ளது. மாவட்டத்தில், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் அதிக அளவில் கரி மூட்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது பட்டா நிலங்கள் மற்றும் குத்தகைக்கு எடுக்கப்படும் அரசு நிலங்களில் உள்ள கருவேல மர விறகுகளை வெட்டி கரிமூட்ட தொழில் செய்து வருகின்றனர். வெட்டப்படும் விறகுகளை நேரடியாக விற்பனை செய்வதை விட, அதை கரிமூட்டம் மூலம் கரிகளாக்கி விற்பனை செய்வதில் கூடுதல் லாபம் கிடைப்பதால், கரி மூட்ட தொழிலில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் நெல் விவசாய பணி தீவிரம் அடைந்துள்ளதையும் தொடர்ந்து, நெல் பயிர்களுக்கு களை பறித்தல் உள்ளிட்ட விவசாய பணிகளில் விவசாயிகள் அதிகம் ஈடுபட்டு வருவதன் காரணமாக, கரி மூட்ட தொழிலுக்கு கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. இதன் காரணமாக, விறகுகளை கரி மூட்ட தொழிலுக்கு ஏற்றவாறு அடுக்குவதற்கும், கரிகளை தரம் பிரிப்பதற்கும், தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கரி மூட்ட தொழில் பாதிப் படைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. இது குறித்து ஆர் எஸ் மங்கலத்தை சேர்ந்த முனியசாமி கூறுகையில், கோடை காலத்தில் இத்தொழிலுக்கு அதிகளவில் தொழிலாளர்கள் கிடைக்கின்றனர். ஆனால் தற்போது விவசாய பணியால் கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் விறகுகள் மழையில் நனைந்து வீணாகி வரும் நிலை உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !