கனமழையால் மிளகாய் விவசாயம் பாதிப்பு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல் சாகுபடிக்கு அடுத்த படியாக மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் விவசாயத்தை போன்று அதிக தண்ணீர் தேவையின்றி லேசான ஈரப்பதத்திலும் வறட்சியிலும் அதிக மகசூல் கொடுக்கக்கூடிய தோட்டக்கலை பயிர் மிளகாய். மிளகாய் பழம் பழுக்க ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை மகசூல் கொடுத்து விவசாயிகளுக்கு அன்றாட வருவாய் ஈட்டி தருகிறது. எஸ்.மங்கலம் வல்லமடை, புல்லமடை, ராமநாத மடை, சவேரியார்பட்டினம், செங்குடி, எட்டியத்திடல், முத்துப்பட்டினம், சேத்திடல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மிளகாய் செடிகள் குத்து செடிகளாக சிறியதாக உள்ள நிலையில் கனமழை பெய்து மிளகாய் வயலில் தண்ணீர் தேங்கியதால் மிளகாய் விவசாயிகள் வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை உள்ளதால் மிளகாய் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.