கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுதித்தருவதற்கு கறார் வசூல்! குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வரும் மக்கள் தவிப்பு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்க்கும் முகாமிற்கு வரும் மக்களிடம் ஒரு மனு எழுதி தருவதற்கு ரூ.50 முதல் ரூ.100 வரை சிலர் கறாராக பணம் வசூல் செய்கின்றனர். இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.இதனால் மக்கள் தங்கள் மனுவின் மீது உடனடி தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாரந்தோறும் பல்வேறு குறைகள், கோரிக்கைகள் அடங்கி மனுக்களை தனியாகவும், கிராம மக்கள் ஒன்றாக இணைந்தும் அளிக்கின்றனர்.இவர்களுக்கு உதவி செய்வதாகக் கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனு எழுதி தரும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதில் நல்ல வருமானம் கிடைப்பதால் மனு எழுதி தருவோரின் எண்ணிக்கை வாரந்தோறும் அதிகரிக்கிறது. மனு எழுதி தருபவர்களிடையே போட்டா போட்டி ஏற்படுகிறது. மனு எழுத பேப்பர் வாங்கி கொடுத்து ஒரு மனுவிற்கு ரூ.50 முதல் ரூ.100 வரை பணம் வசூலிப்பதால் ஏழை மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே திங்கள் அன்று கல்லுாரி மாணவர்கள், சமூக சேவகர்களை குறைந்த கட்டணத்தில் மனு எழுதி தருவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது மக்களை ஏமாற்றி கறாரா பணம் வசூல் செய்வோர் மீது கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.