பரமக்குடி கோர்ட்டில் இருந்து திரும்ப பெறப்பட்ட கணினி மீண்டும் ஜப்தி; ஆதிதிராவிடர் நலத்துறையினர் அதிர்ச்சி
பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தில் வழக்கு ஒன்றில் இருந்து திரும்பப் பெறப்பட்ட கணினி மீண்டும் மற்றொரு வழக்கில் ஜப்தி செய்யப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். பரமக்குடி தாலுகா கிளியூரில் ஆதி திராவிடர் மக்களுக்கு வீடு கட்ட 2000ல் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது குப்துல் ஜமான் புல் புகாரி, சபுரியா பேகம் ஆகியோரது 9 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இவர்களுக்கு இடத்திற்கான பணம் வழங்கப்படாத நிலையில் பரமக்குடி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஒரு சென்ட் ரூ.1500 வீதம் 9 ஏக்கருக்கான தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.நிலம் கையகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் ஆகியும் ரூ.6 லட்சம் வரை அதிகாரிகள் வழங்காமல் இருந்துள்ளனர். இதையடுத்து தற்போது பாதிக்கப்பட்டவர்களின் பவர் ஏஜன்டான துல்கிப் கான் மேல் முறையீடு மனு செய்ததில் ஏப்., மாதம் சார்பு நீதிபதி சதீஷ் ஆதி திராவிடர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.அதன்படி நேற்று காலை கோர்ட் ஊழியர், மனுதாரர் வக்கீல் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்திற்கு பின் அலுவலக கணினியை ஜப்தி செய்தனர். வேறொரு வழக்கில் சில நிமிடங்களுக்கு முன்பு கோர்ட்டில் இருந்து எடுத்து வரப்பட்ட இந்த கணினி மீண்டும் ஜப்தி செய்யப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர்.