நகரிகாத்தான் தரைப்பாலம் அமைக்கும் பணி துவக்கம்
திருவாடானை: நகரிகாத்தான் தரைப்பாலத்தை உயர்த்தி கட்ட தினமலர் நாளிதழ் செய்தியால் ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியது.திருவாடானை-ஓரியூர் சாலையில் நகரிகாத்தான் அருகே தரைப்பாலம் உள்ளது. பருவமழை காலங்களில் பலத்த மழை பெய்யும் போது தரைப்பாலத்தில் பல அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்படும். இதனால் ஓரியூர், வெள்ளையபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவசர தேவைக்கு வெளியூர் செல்ல முடியாமல் தவித்தனர். பள்ளி செல்லும் மாணவர்களும் சிரமம் அடைந்தனர். இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் மழை நீர் தரைப்பாலத்திற்கு மேல் செல்லும் படத்துடன் அடிக்கடி வெளியானது. அதனை தொடர்ந்து பாலம் கட்டும் பணிகள் துவங்கியது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கூறியதாவது:இந்த தரைப்பாலத்தில் மழை நீர் தடையில்லாமல் செல்லும் வகையில் உயர்த்தி கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புறவழிச்சாலை அமைக்க மின்கம்பங்கள் இருப்பதால் காலதாமதம் ஆகிறது. மின்கம்பங்களை மாற்று இடத்தில் அமைத்த பிறகு பாலம் பணிகள் துவங்கும் என்றனர்.