வேளாண்துறை திட்டங்கள் மானியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
திருப்புல்லாணி : திருப்புல்லாணி யூனியன் அலுவலகம் அருகே வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ளது. திருப்புல்லாணி யூனியனில் உள்ள 33 கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுகின்றனர். நெல் மற்றும் சிறு, குறு தானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை முறையாக வழங்காத நிலை உள்ளது.வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த விஷயங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தாத நிலையில் வேளாண் துறை அலுவலர்கள் செயல்படுகின்றனர். திருப்புல்லாணி யூனியன் அலுவலகம் அருகே உள்ள ஒருங்கிணைந்த வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் தோட்டக்கலை துறை மற்றும் வேளாண் துறை இயங்கி வருகிறது.விவசாயிகள் கூறியதாவது:மத்திய மாநில அரசு மூலம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்கள் மானிய விவரங்கள் பெரும்பாலும் தெரிவதில்லை. தற்போது பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு தேவையான உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.அரசின் திட்ட மதிப்பீடுகளுக்கும் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தலில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி உரிய முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.