12 ஆண்டுகளாகியும் பயிர் காப்பீட்டு தொகை வரவில்லை: ஓரிவயல் விவசாயிகள் புலம்பல் அலைகழிக்கும் கூட்டுறவுத் துறையினர்
ராமநாதபுரம்; கடலாடி தாலுகா ஓரிவயல் கிராமத்தில் 2012-13ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்காமல் 12 ஆண்டுகளாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ஓரிவயல் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 2012-13ம் ஆண்டிற்குரிய பயிர்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். இது குறித்து விவசாயிகள் சண்முகம், கருப்பசாமி ஆகியோர் கூறியதாவது: 2012-13ல் ஓரிவயலைச் சேர்ந்த 546 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1200 வீதம் 2000 ஏக்கருக்கு பயிர்காப்பீட்டு தொகை வழங்கவில்லை. ஆரம்ப காலத்தில் பயிர் காப்பீட்டு தொகை குறைவாக உள்ளதாக கூறி விவசாயி ஒருவர் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கு விசாரணையில் மேற்கண்ட தொகை வழங்க வேண்டும் என உத்தரவானது. அதன் பிறகும் பயிர் காப்பீட்டு தொகை வழங்கவில்லை. மீண்டும் மத்திய கூட்டுறவு வங்கியில் கமிட்டி அமைத்துள்ளோம். அவர்கள் விசாரணை செய்து அனுமதி தந்த வுடன் பணம் தருகிறோம் என்றனர். கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் வசம் ஆவணங்கள் உள்ளது என தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி 12 ஆண்டுகளாக எங்களை அலைய விடுகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பலனில்லை. இவ்விஷயத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலையீட்டு உடனடியாக பயிர் காப்பீட்டு தொகை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றனர்.