பயிர்க்கடன் உச்சவரம்பு ரூ.2 லட்சம் கூட்டுறவு சங்கங்களில் வழங்கவில்லை: விவசாயிகள் பாதிப்பு
திருவாடானை: சிறு, குறு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பயிர்க்கடன் உச்சவரம்பு ரூ.2 லட்சமாக அறிவித்து 10 மாதங்களாகியும், வழங்காமல் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வழங்குவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் வட்டி இல்லாத பயிர் கடன் பெறலாம் என அரசு அறிவித்தது. சிறு, குறு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பிணை இன்றி வழங்கபடும் பயிர்கடனுக்கான உச்சரவரம்பு ரூ.1 லட்சத்து 60 ஆயித்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்தது. கடந்த ஜன.1 முதல் இத் திட்டம் அமுலுக்கு வந்தது. திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள 33 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. விவசாய பணிகள் துவங்கியதால் வட்டியில்லா பயிர் கடன் வழங்கும் பணிகளும் துவங்கியது. விவசாயிகள் அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களை அணுகி பட்டா, சிட்டா நகல், அடங்கல், கூட்டுறவு வங்கி கணக்கு எண், ஆதார் நகல், இரண்டு போட்டோக்களை கொடுத்து விண்ணப்பித்து வருகின்றனர். வேளாண் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இத் திட்டம் அறிவிக்கபட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் ரூ.2 லட்சம் வழங்காமல் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மட்டும் வழங்குகின்றனர். அரசு அறிவித்து 10 மாதங்கள் ஆகியும் உச்சவரம்பு பயிர்க்கடன் கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்தனர். இது குறித்து பழயணக்கோட்டை நாகநாதன் கூறியதாவது: விவசாயிகள் சங்கங்களை அணுகி பயிர்க்கடனுக்கு விண்ணப்பிக்கின்றனர். ஆனால் முறையான உத்தரவு வராததால் ரூ.1லட்சத்து 60 ஆயிரம் மட்டுமே வழங்கமுடியும் என்று சங்க செயலாளர்கள் கூறுகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு விவசாய செலவு அதிகரித்து வருகிறது. எனவே அரசு அறிவித்துள்ள ரூ.2 லட்சம் பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்றார். கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறியதாவது: ஒழுங்குமுறை விதிகளை பதிவு செய்ய உத்தரவு வந்துள்ளது. அதன்படி கூட்டுறவு சங்கங்களிலிருந்து மத்திய கூட்டுறவு வங்கிக்கு அறிக்கை அனுப்பி வருகிறோம். துணைப்பதிவாளர் அனுமதி கிடைத்தவுடன் ரூ.2 லட்சம் கடன் வழங்கப்படும் என்றார்.