உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  டிட்வா புயல்: டெல்டா, ராமேஸ்வரத்தில் கடும் பாதிப்பு

 டிட்வா புயல்: டெல்டா, ராமேஸ்வரத்தில் கடும் பாதிப்பு

டிட்வா' புயல் காரணமான வீசிய சூறாவளி மற்றும் கனமழையால், டெல்டா மாவட்டங்களிலும், ராமேஸ்வரத்திலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் 'டிட்வா' புயலால் இரு நாட்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனில் ஏராளமான வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. ராமேஸ்வரம் புதுரோடு நடராஜபுரம், கரையூர், இந்திரா நகர், மாந்தோப்பு, காந்திநகர், அண்ணாநகர் பகுதியில் பல வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியுற்றனர். ராஜகோபால் தெருவில் மின்கம்பம் மீது மரம் விழுந்ததால், இரு நாட்களாக அப்துல்கலாம் நகர், ராஜகோபால் நகர், பெரிய பள்ளிவாசல் தெருவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நேற்று புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டது. இரு நாட்களுக்குப் பின் நேற்று, ராமேஸ்வரத்தில் வெயில் முகம் காட்டியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடின வயல் ஊராட்சிகளில், 10,000 ஏக்கரில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பு, கனமழையால் வெள்ள நீரில் மூழ்கின. தஞ்சாவூர் மாவட்டத்தில், 15,000 ஏக்கரில் சம்பா, சாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. ஒரத்தநாடு அருகே குலமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுகுமார் ஓட்டு வீடு, ஊரணிபுரத்தில் ரங்கராஜ் வீட்டின் பக்கவாட்டு சுவர், தஞ்சாவூர் வடக்குவாசல் அழகம்மாள் கூரை வீட்டின் பின்பக்க சுவர் நேற்று இடிந்தன. மாவட்டம் முழுதும் ஒன்பது இடங்களில் ஒன்பது வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒரத்தநாடு அருகே கக்கரைக்கோட்டை கிழக்கு பகுதி யேசுகிடையில் நேற்று முன்தினம் இரவு முழுதும் குளிர் காற்றுடன் பெய்த மழையால், 50 ஆடுகள் இறந்தன. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நம்பன்பட்டியில் பெய்த கனமழையால், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆலங்குடி, மாங்கோட்டை பகுதியில் சாலையோரம் இருந்த நுாற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் நேற்று முன்தினம் இரவு, வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆலமரத்தை அப்புறப்படுத்தினர். புதுக்கோட்டை மகளிர் கல்லுாரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் சாய்ந்தன. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன - நமது நிருபர் குழு - '.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி