பனஞ்சாயல் ஊராட்சியில் கிராம ரோடுகள் சேதம்
திருவாடானை: திருவாடானை அருகே பனஞ்சாயல் ஊராட்சியில் கிராமங்களுக்கு செல்லும் ரோடுகள் சேதமடைந்துள்ளதால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.திருவாடானை அருகே பனஞ்சாயல் ஊராட்சியில் வட்டாணம் ரோடு விலக்கில் இருந்து அடைஞ்சாமங்கலம், புதுக்குடி வழியாக வெள்ளையபுரம் செல்லும் ரோடு உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ரோடு நடக்க முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது.அடைஞ்சாமங்கலம் கிராம மக்கள் கூறியதாவது: தார் ரோடு மண் ரோடாக மாறிவிட்டது. இதனால் ஆட்டோக்கள் வர மறுக்கின்றன. டூவீலர்களில் செல்பவர்கள் தவறி விழுந்து காயமடைகின்றனர். ரோடு சேறும், சகதியுமாக இருப்பதால் நடந்து செல்லும் மாணவர்களின் சீருடை பாழாகிறது.கிராமத்தில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு ஆட்டோக்கள், ஆம்புலன்ஸ் வர மறுப்பதால் நோயாளிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லை. இந்த ரோட்டை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.