சேதமடைந்த ஆதார் சேவை மைய கட்டடம்
கீழக்கரை: -: கீழக்கரை நகராட்சி அலுவலகம் அருகே பழமையான ஓட்டு கட்டடத்தில் ஆதார் சேவை மையம் செயல்படுகிறது. நுாறாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டு கட்டடத்தில் தற்போது வரை இயங்கி வருகிறது. இந்நிலையில் ஒரு பணியாளர் மட்டுமே ஆதார் எடுப்பதற்கான பணியில் உள்ளார். ஆதார் எடுக்கும் அறை இருள் சூழ்ந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வரக்கூடிய மக்கள் புதிய ஆதார் கார்டு எடுப்பதற்கு சிரமப்படுகின்றனர். கீழக்கரையை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ஆதார் கட்டடத்திற்கு வரும் மக்கள் அமர்வதற்கு கூட இருக்கைகள் இல்லை. குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. அப்பகுதி முழுவதும் புதர் மண்டியுள்ளது. விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளது. கூடுதல் பணியாளரை நியமிக்க வேண்டும். பொதுமக்களின் கஷ்டங்களை தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.