ரோட்டில் தேங்கிய மழைநீரால் சிரமம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பரமக்குடி ரோடு வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தில் ரோட்டில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர். முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.முதுகுளத்துார் பரமக்குடி ரோடு வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கிராமத்தில் ரோட்டோரத்தில் மழைநீர் தேங்கியதால் மக்கள் சிரமப்படுகின்றனர். பரமக்குடியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பிரதான ரோடாக இருப்பதால் வாகனங்கள் அதிகம் செல்கின்றன. மழை பெய்தால் ரோட்டில் தேங்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால் ரோடு சேதமடைந்து வருகிறது. இந்நிலை பல ஆண்டுகளாக இருப்பதால் மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.