தினமலர் செய்தி எதிரொலி மின்னொளியில் ஜொலிக்கிறது பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம்
ராமேஸ்வரம்,:தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.பாம்பன் கடலில் தேசிய நெடுஞ்சாலை பாலம் 1988 ல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதன் வழியாக தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில் பாலத்தின் இருபுறமும் உள்ள 418 மின் விளக்குகள் சேதமடைந்து ஓராண்டிற்கும் மேலாக எரியாமல் இருளில் மூழ்கியது.இதனால் பாலத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி மக்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக அக்.10 முதல் அக்.20 வரை பாலத்தில் சேதமடைந்த மின்விளக்குகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கிரேன் மூலம் புதிய மின் விளக்குகள் பொருத்தினர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக இருளை பகலாக்கி மின்னொளியில் பாலம் ஜொலித்தது.