விவசாயிகளுக்கு காய்கறி விதை தொகுப்பு வழங்கல்
திருப்புல்லாணி; பருவமழை துவங்க உள்ளதை முன்னிட்டு விவசாயிகள், வீட்டு தோட்டங்கள் மற்றும் வயல்வெளிகளில் காய்கறிகள் வளர்த்து வருமானம் ஈட்டுவதற்காக காய்கறி விதை தொகுப்புகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக உள்ள மாதங்களில் வீட்டு தோட்டங்களில் காய்கறி விதைகளை நட்டுவித்து அவற்றிலிருந்து பயிர்க்குழி சாகுபடி செய்து விவசாயிகள் தங்களுக்கான காய்கறி தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். உபரியான காய்களை ராமநாதபுரம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் சந்தைப்படுத்திக் கொள்கின்றனர். தோட்டக்கலைத் துறை சார்பில் ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம் திட்டத்தில் 3800 காய்கறி விதை தொகுப்புகள் அலுவலகத்திற்கு வந்துள்ளது. இவற்றில் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கீரை, கொத்தவரை உள்ளிட்ட விதைகள் அடங்கிய தொகுப்புகள் உள்ளன. ரூ.60க்கு மானிய விலையில் வழங்கப்படு கிறது. இத்தொகுப்பு விதைகளை பெறுவதற்கு விவசாயிகள் ஆதார் நகல், அலைபேசி எண் ஆகியவற்றுடன் திருப்புல்லாணி வேளாண் துறை அலுவலகத்தின் மாடியில் உள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொறுப்பு) பவானி தெரிவித்தார்.