மனநலம் பாதித்த தங்கையிடம் சில்மிஷம் செய்த போதை நண்பர் கொன்று புதைப்பு
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மனநலம் பாதித்த தங்கையிடம் பாலியல் சில்மிஷம் செய்த போதை நண்பரை அடித்துக் கொலை செய்த அண்ணன் உடலை வீட்டருகே புதைத்தார்.ராமேஸ்வரம் வெண்மணிநகரைச் சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன் 47. இவரது மனைவி யோகா 40. மனநலம் பாதிக்கப்பட்ட தங்கை தாளேஸ்வரி 44. சில மாதங்களுக்கு முன் மனைவி திருவாடானையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். வெங்டசுப்பிரமணியனும் அவரது நண்பரான பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நம்புராஜனும் 50, வீட்டில் தினமும் மது அருந்துவது வழக்கம். 25 நாட்களுக்கு முன் நண்பர் வெங்கடசுப்பிரமணியன் வீட்டில் மது அருந்த நம்புராஜன் சென்றார்.வீட்டில் வெங்கடசுப்பிரமணியன் இல்லாததால் தனியாக இருந்த தாளேஸ்வரியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த வெங்கட சுப்பிரமணியன் நண்பனின் தவறான செய்கையை கண்டு ஆத்திரமடைந்தார். நம்புராஜன் தலையை சுவரில் மோதி தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் நம்புராஜன் கீழே விழுந்தார். சிறிது நேரத்திற்கு பின் நம்புராஜனை எழுப்பிய போது உயிரிழந்தது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த வெங்கடசுப்பிரமணியன் உடலை தன் வீட்டின் எதிரில் உள்ள காலி இடத்தில் புதைத்தார்.இந்நிலையில் 20 நாட்களுக்கு முன் நம்புராஜன் அக்கா ராணி தம்பியை காணவில்லை என ராமேஸ்வரம் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி விசாரித்ததில் வெங்கடசுப்பிரமணியன் கொலை செய்தது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். தாசில்தார் முரளிதரன் முன்னிலையில் புதைத்த நம்புராஜன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.