| ADDED : ஜூலை 24, 2011 09:18 PM
ராமநாதபுரம் : டி.டி.எச்., நிறுவனங்களுக்கு மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தில் கேளிக்கை வரியை நிர்ணயம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என ராமநாதபுரம் மாவட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. மாவட்ட சங்க கூட்டம் மாவட்ட தலைவர் கோபால் தலைமையிலும் மாவட்ட செயலாளர் ரகு, ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட அமைப்பாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலையிலும் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற ஆப்ரேட்டர்கள் பேசுகையில், 'அரசு கேபிள் டிவியை கொண்டுவர முதல்வர் ஜெ., எடுக்கும் நடவடிக்கையால் ஆப்ரேட்டர்கள் பலரது வாழ்க்கை பிரகாசமாகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது' என்றனர். பின் கூட்டத்தில், மக்கள் விரும்பி பார்க்கும் அனைத்து கட்டண சேனல்களையும் அரசு கேபிள் 'டிவி'யில் வழங்கி கேபிள் 'டிவி' ஆப்ரேட்டர்கள் நலன் காக்க வேண்டும், பல ஆப்ரேட்டர்களை எம்.எஸ்.ஒ.,க்கள் மிரட்டி பறிமுதல் செய்த கேபிள் இணைப்புகளை மீண்டும் பெற்று தர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், டி.டி.எச்., அனைத்து நிறுவனங்களுக்கும் மற்ற மாநிலங்களை போல் தமிழக அரசு கேளிக்கை வரியை நிர்ணயம் செய்ய வேண்டும், போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.