உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: மடத்தாக்குளம் மக்கள் கோரிக்கை

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: மடத்தாக்குளம் மக்கள் கோரிக்கை

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் ஊராட்சி மடத்தாக்குளம் கிராமத்தில் தேர்தல் காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். மடத்தாக்குளம் கிராமத்தில் நுாறுக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில் கோரிக்கையாக வைக்கும் போது அவை நிறைவேற்றப்படும் என்ற பதில்கள் மட்டுமே முன்வைக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மடத்தாக்குளம் கிராம மக்கள் கூறியதாவது: இறந்தவர்களை புதைப்பதற்கான கல்லறை தோட்டம் வேண்டும். இளைஞர்கள் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பெண்களுக்கும் சேர்த்து சிறப்பு தொழில் செய்யும் பயிற்சி மையம் மாரியூர் பகுதியில் அமைக்க வேண்டும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு தேர்வுகள் எழுதுவதற்கு பயிற்சி மையங்கள் அமைத்து தர வேண்டும். பல ஆண்டுகளாக நாங்கள் கேட்கும் வழித்தடங்களில் பஸ் வசதி இதுவரை இயக்கப்படவில்லை. ராமநாதபுரத்தில் இருந்து மேலக்கிடாரம், காவாகுளம், கிருஷ்ணாபுரம், பெரியகுளம் வழியாக கடுகு சந்தை சத்திரம் மற்றும் சாயல்குடி, துாத்துக்குடி செல்வதற்கு அரசு வழித்தடத்தை அமைக்க வேண்டும். துணை சுகாதார நிலையம் இல்லாததால் அவசர கால சிகிச்சை மற்றும் முதலுதவி பெறுவதற்கு 25 கி.மீ., சாயல்குடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது வரும் பஸ் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏதுவாக இல்லை. ஆகவே காலை 9:00 மணிக்கு மதியம் 1:00 மணிக்கு மடத்தாக்குளம் வழியாக பஸ்கள் வந்து செல்ல வேண்டும். இதன் மூலம் சுற்றுவட்டார 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள் என கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை