உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை 10:00 மணி முதல் மாலை வரை தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் முன்பக்க போர்டுகள் அகற்றும் பணி நடந்தது.சாயல்குடி பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், நாகப்பட்டினம், திருச்செந்துார், துாத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, அருப்புக்கோட்டை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் வந்து செல்லும் மையப் பகுதியாக விளங்குகிறது.சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் நுாறுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளால் பயணிகளுக்கும் பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோருக்கும் அடிக்கடி வாகனங்கள் நிறுத்துவதில் தொடர் பிரச்னை ஏற்பட்டு வந்தது.சமீபத்தில் சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் 65 வயது மூதாட்டி தடுமாறி விழுந்ததில் எதிர்பாராமல் அவரது இரு கால்களும் பஸ் சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. இதுகுறித்து தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஆக்கிரமிப்புகள் குறித்து புகார் மனுக்கள் சென்றன.சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக ஆக்கிரமித்துள்ள கடைகள் முற்றிலும் அகற்றப்படும் என கடந்த வாரம் வாகனங்களில் மூலம் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை பஸ் ஸ்டாண்டிற்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி, கடலாடி தாசில்தார் முருகேசன், பேரூராட்சி அலுவலக உதவியாளர் செல்ல மாரியப்பன், கரிமுல்லா கான், நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறையினர் சாயல்குடி போலீசார் உள்ளிட்டோர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.அதிகாரி ஒருவர் கூறியதாவது: நீண்ட காலமாக சாயல்குடி பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் நிலவும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட இடத்தில் பஸ்கள் நிற்பதற்கு ஏற்றவாறு வழித்தடங்களில் மார்க்கிங் செய்யப்படும். இதன் மூலம் எளிதாக பயணிகள் பஸ் ஏறுவதற்கு வசதியாக அமையும்.கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டிரைவர், கண்டக்டர், பயணிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ