ஈரப்பதத்தை பயன்படுத்தி உழவு செய்யும் விவசாயிகள்
திருப்புல்லாணி: திருப்புல்லாணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் மழை பெய்ததால் நிலத்தில் ஈரப்பதத்தை பயன்படுத்தி விவசாயிகள் விளை நிலங்களில் டிராக்டர்களில் உழவு செய்யும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்புல்லாணி, தினைக்குளம், பெரியபட்டினம், ரெகுநாதபுரம், வண்ணாங்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் உழவுப் பணி நடக்கிறது. இப்பகுதியில் பெரும்பாலும் நல்ல மணற் பரப்பாக உள்ளதால் நெல் மற்றும் எள், பயறு வகைகள் உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.விவசாயிகள் கூறியதாவது: ஒரு மணி நேரத்திற்கு டிராக்டரில் உழவு செய்ய ரூ. 800 முதல் 900 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. டிராக்டரில் உழவு செய்பவரிடம் அருகிலுள்ள நிலங்களுக்கும் மொத்தமாக உழவு செய்வதற்காக முன்கூட்டியே பேசி வரிசைப்படி உழவு செய்யப்படுகிறது.தற்பொழுது நெல் விதைத்தவுடன் வருண பகவானின் பார்வைக்காக காத்திருக்கிறோம்.எனவே திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து விவசாயிகளுக்கு மானிய விலையில் கிடைக்கும் வேளாண் பொருட்கள் குறித்த வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றனர்.