முளைத்த நெற்பயிர்களுடன் விவசாயிகள்; நிவாரணம் வழங்க கோரி போராட்டம்
ராமநாதபுரம் ; ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடை நேரத்தில் மீண்டும் முளைத்த நெற்பயிர்களுடன் விவசாயிகள் நிவாரணம் வழங்க கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இம்மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி ஆண்டுதோறும் மானாவாரியாக ஒரு லட்சத்து 28 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி நடக்கிறது. நடப்பாண்டில் நெற்பயிர் வளர்ச்சி அடைந்து ஜன., முதல் வாரத்தில் அறுவடைப்பணிகள் துவங்கின. சில நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழையால் விளைந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், கடலாடி, சிக்கல், முதுகுளத்துார், கமுதி, நயினார்கோவில், பரமக்குடி, போகலுார் பகுதிகளில் மழைநீரில் மூழ்கிய பயிர்கள் மீண்டும் முளைக்கத் துவங்கியுள்ளன. இதனால் ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாக்கியநாதன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முளைத்த நெற்பயிர்களுடன் முக்காடு போட்டு ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு ஊர்வலமாக சென்று கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.பின் பாக்கியநாதன் கூறியதாவது: கடலாடி தாலுகா பேய்க்குளம், சிக்கல், சிறைக்குளம், பி.கீரந்தை, கொத்தங்குளம், தனிச்சியம் ஆகிய கிராம விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவம் தவறிய மழையால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் 1.92 லட்சம் ஏக்கரில் மூழ்கியுள்ளன. இது தொடர்பாக அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் கடனை தள்ளுபடி அரசு செய்ய வேண்டும். நுாறு சதவீதம் காப்பீட்டுத்தொகையை இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றார்.