ஒரு பொருளுக்கு ஒரு முறை மட்டுமே வரி விதிக்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
ராமநாதபுரம்; ''ஒரு பொருள் தயாரிப்பில் இருந்து விற்பனைக்கு வரும் வரை ஒரு முறை மட்டுமே மத்திய, மாநில அரசுகள் வரி விதிக்க வேண்டும்,'' என, ராமநாதபுரத்தில் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் வெங்கடேஷ் தெரிவித்தார்.இக்கூட்டமைப்பின் மாநிலப்பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது: நிறுவனம் ஒரு பொருளை உற்பத்தி செய்து அதனை விற்பனைக்கு கொண்டு வரும் போது அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை விநியோகஸ்தர்கள், சில்லறை வியாபாரிகள் செய்கின்றனர். வாடகை கடைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி என்றிருந்ததை வர்த்தகர்கள் போராட்டம் காரணமாக மத்திய அரசு அதனை பரிசீலித்து வருகிறது. ஆன்லைன் வர்த்தகம் மூலம் சில்லறை வியாபாரிகள் அழியும் நிலை உள்ளது. ஒரு பொருளுக்கு பல விலைகள் உள்ளன. ஒரு நாடு, ஒரு தேர்தல் சாத்தியம் எனில் ஒரு பொருளை ஒரே விலையில் மட்டுமே விற்பனை செய்யவும், ஒரு தடவை மட்டுமே வரி விதிக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சில்லறை வியாபாரிகள் தான் மத்திய, மாநில அரசுகளுக்கு அதிக வரி வருவாயை ஏற்படுத்தி தருகிறோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் விலையை மக்களுக்கு குறைத்து விற்பனை செய்கிறோம் என்ற பெயரில் அரசுக்கு கிடைக்கும் வரி, வருவாயை இழக்கச்செய்கின்றன. பேரிடர் காலங்களில் சில்லறை வர்த்தகர்கள் தான் பொதுமக்களை சந்தித்து பொருட்களை விற்றனர். ஆன்லைன் வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. விநியோகஸ்தர்கள், சில்லறை வியாபாரிகள் நலனை காக்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்றார்.