உரக்கடைகளில் பூச்சிக்கொல்லி மருந்து இல்லை கூடுதல் விலைக்கு விற்கும் நிலை
சிக்கல்: பயிர்களுக்கு இடக்கூடிய யூரியா, டிஏபி காம்ப்ளக்ஸ் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கையிருப்பில் இல்லை என தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அலைக்கழிக் கும் நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடலாடி வட்டாரத்தில் 25 ஆயிரம் எக்டேரில் சம்பா பருவ சாகுபடி நடந்து வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழை தாக்கத்தால் சிக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் மற்றும் மிளகாய், பருத்தி உள்ளிட்டவைகளை விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடி செய்து வரும் நிலையில் பயிர்களுக்கு இடக்கூடிய யூரியா, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கையிருப்பில் இல்லை என தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அலைக்கழிக்கும் நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சிக்கலைச் சேர்ந்த பா.ஜ., கடலாடி கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அரசு நிர்ணயித்த விலையில் யூரியா, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்ய வேண்டும். தற்போது கையிருப்பில் இல்லை என கூறுவது விவசாயிகளை அலைக்கழிக்கும் செயலாகும். கடலாடி சுற்றுவட்டார நகர் பகுதிகளில் உள்ள தனியார் கடைகளுக்கு சென்றால் இரண்டு மடங்கு கூடுதல் விலைக்கு வாங்கி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு விவசாயிகளுக்கு தேவையான குறைந்தபட்ச விலையில் யூரியா போன்ற உரங்களை வழங்கி வரும் நிலையில் முறையான திட்டமிடுதல் இல்லாததால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய உரங்களை செயற்கையான முறையில் தட்டுப்பாடு ஏற்படுத்துகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை ஒன்று திரட்டி பா.ஜ., சார்பில் மறியல் போராட்டம் விரைவில் நடத்தப்படும். எனவே மாவட்ட நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு முன்வர வேண்டும் என்றார்.