கள்ளக்காதலியை தேடிச்சென்ற மீனவர் கல்லால் தாக்கி கொலை மண்டபத்தில் தாய், மகள் கைது
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் கள்ளக்காதலியை தேடிச்சென்ற மீனவர் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாய், மகளை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே சுந்தரமுடையான் முத்தரையர் தெருவை சேர்ந்த மீனவர் வெள்ளைச்சாமி 48. இவர் மீது 2018ல் மனைவி மகேஷ்வரியை எரித்துக் கொலை செய்த வழக்கு உள்ளது. இதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் சில ஆண்டுகளுக்கு முன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இவரது மனைவி காளீஸ்வரிக்கும் 38, வெள்ளைச்சாமிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு காளீஸ்வரி வீட்டுக்கு வெள்ளைச்சாமி சென்றார். அவர் இல்லாததால் அருகில் உள்ள காளீஸ்வரியின் தங்கை திருமணமான மாலதி 35, வீட்டிற்கு சென்று அவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த மாலதி குளிக்க வைத்திருந்த சூடான நீரை வெள்ளைச்சாமி முகம், உடலில் ஊற்றினார். வேதனையில் ஆத்திரமடைந்த வெள்ளைச்சாமி மேலும் தகராறு செய்தார். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த மாலதியின் தாய் ராக்கம்மாள் 60, வந்து அங்கு கிடந்த கல்லால் வெள்ளைச்சாமி தலையில் தாக்கியதில் உயிரிழந்தார். கொலை தொடர்பாக தாய், மகளை மண்டபம் எஸ்.ஐ., முத்துமுனியசாமி கைது செய்து சிறையில் அடைத்தார்.