அரியமானில் தொழிலுக்கு செல்லும் பாதையில் வேலி: மீனவர்கள் எதிர்ப்பு
ராமநாதபுரம்: உச்சிபுளி அருகே அரியமான் கடற்கரையில் மீனவர்கள் தொழிலுக்கு செல்லும் வழி மற்றும் கோயில் விழா கரகம் எடுக்கும் பாதையை மறைத்து கடலோர காவல்படை வேலி அமைக்க கூடாது என சாத்தக்கோன் வலசை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாத்தக்கோன்வலசை ஊராட்சியை சேர்ந்த பிள்ளை மடம், தில்லைநாச்சியம்மன் கோவில் குடியிருப்பு ஊர் மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், பிள்ளை மடம், தில்லைநாச்சியம்மன் கோவில் குடியிருப்பு, உடையார் வலசை ஆகிய கிராம மக்கள் அரியமான் கடற்கரை கிழக்கு பகுதியில் மீன்பிடி தொழிலுக்காக செல்கிறோம். இவ்வழியாகத்தான் கோயில் விழாவின் போது கரகம் எடுத்து வந்து வழிபடுகிறோம். இந்நிலையில் தொழிலுக்கு செல்லும் பாதையை மறைத்து தற்போது அரியமான் கடற்கரையில் கடலோர காவல்படையினர் வேலி அமைத்தும், தடுப்புசுவர் அமைக்க உள்ளனர். இதனால் அருகே முகத்துவாரம் கடல் நீர் மற்றும் காற்றின் வேகம் அதிகமாகும் நேரத்தில் ஆற்றுக்கரை வழியாக கிராமங்களுக்கு கடல்நீர் உள்ளே வரும் நிலை உள்ளது. கோயில் திருவிழா, அன்றாட தொழிலுக்கு செல்லும் வகையில் பாதையை ஒதுக்கிதர கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.