ராமநாதபுரத்தில் அரசு பஸ் முழுவதும் ஜொலிக்கும் விளம்பரம்; ஊர் பெயர் தெரியாமல் பயணிகள் தவிப்பு
திருப்புல்லாணி: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பஸ்கள், கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்களில் தனியார் வணிக நிறுவன விளம்பரங்கள் 90 சதவீதம் பஸ்களை ஆக்கிரமித்து பல வண்ணங்களில் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டுள்ளது. இதனால் எந்த ஊருக்கு செல்லும் பஸ் எனத் தெரியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட வெளியூர்களுக்கு ஏ.சி., மற்றும் விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. உள்ளூரில் திருப்புல்லாணி, சேதுக்கரை, ரெகுநாதபுரம், பெரியபட்டினம், வண்ணாங்குண்டு உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் தனியார் விளம்பர நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கி அதன் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர். இந்த பஸ்கள் முழுவதும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளதால் எந்த ஊருக்கு எந்த வழித்தடத்தில் பஸ்கள் செல்கின்றன என்பது புரியாத புதிராகவே உள்ளது.இதனால் வெளியூர்களில் இருந்து வரக்கூடிய பயணிகள் தடுமாறுகின்றனர். பஸ்களின் வழித்தட எண்களை கூறி இந்த ஊருக்கு இது செல்கிறது என விளக்கம் அளிக்கும் நிலையில் அருகில் உள்ள பயணிகள் உள்ளனர்.எனவே விளம்பரப் பணத்தில் போக்குவரத்து துறையினர் சேதமடைந்த பஸ்களை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். ராமநாதபுரத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலன் கருதி விளம்பரங்களுக்கு மத்தியில் பிரத்யேகமாக தெரியும் வகையில் ஊர்களுக்கு செல்லும் பெயர் வழித்தடங்களையும் குறிப்பிட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.