கடைகளில் காலாவதி பொருட்கள் விற்பனை உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை தேவை
திருவாடானை : திருவாடானை, தொண்டி பகுதியில் உள்ள கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.திருவாடானை, தொண்டி பகுதியில் மசாலா பாக்கெட்டுகள், சிறுவர்கள் உண்ணும் தின்பண்டங்கள், முட்டை போன்ற உணவு பொருட்கள் பல மாதங்களாக விற்பனையாகாமல் காலாவதி ஆனது கூட தெரியாமல் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. முக்கியமாக கிராமத்து கடைகளில் விற்பனையாளர்களின் அறியாமையும் காரணமாக உள்ளது. காலாவதி தேதியை பார்க்க தெரியாத சிறுவர்களும், முதியவர்களும் அந்த உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதற்கு காரணம் உணவு பாக்கெட்டுகளில் கண்ணுக்கு தெரியாத வகையில் ஏதாவது ஒரு மூலையில் காலாவதி தேதியை பிரின்ட் செய்கின்றனர். சில உணவுப் பொருட்களில் இந்த தேதியும் இல்லாமல் உள்ளது. காலாவதி உணவு பொருட்களை சாப்பிடுவதால் புற்று நோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். மக்கள் கூறுகையில், கிராமங்களில் பள்ளிகள் அருகே சிறு கடைகளில் இப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இப் பொருட்களை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு உடலில் பல்வேறு பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.