நார்வே நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.பல லட்சம் மோசடி
ராமநாதபுரம்:நார்வே நாட்டில் வேலை வாங்கி தருவதாக முகநுாலில் விளம்பரம் செய்து ரூ.பல கோடி மோசடி செய்தவரிடமிருந்து பணத்தை பெற்று தரக்கோரி ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.கடலுார் மாவட்டம் கடலுாரைச் சேர்ந்த நடராஜன், சோழபாண்டின், பெரம்பலுார் பால்ராஜ், சிவகாசி பீர்முகமது, புதுக்கோட்டை ராஜேந்திரன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சமீர், சிராஜூதீன், நளன் ஆகியோர் ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.அதில், 'நார்வே நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 50க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றியுள்ள ஏஜென்ட் சகுபர் சாதிக் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்,' என தெரிவித்தனர்.கடலுார் நடராஜன் கூறுகையில்,''முகநுால் விளம்பரத்தை பார்த்து சகுபர் சாதிக்கை தொடர்பு கொண்டேன். நார்வே நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதனை நம்பி மனைவியின் தாலியை விற்று ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கட்டினேன். என்னை போல் 50க்கு மேற்பட்டவர்களிடம் ரூ.பல கோடி பணத்தை அவர் வசூலித்துள்ளார். சகுபர் சாதிக் மீது நடவடிக்கை எடுத்து அனைவரது பணத்தையும் போலீசார் மீட்டுத்தர வேண்டும்,'' என்றார்.