ராமேஸ்வரம் கோயில் பெயரில் போலி குருக்கள் மோசடி ஆடியோ பரவல்: பிராமணர்கள் புகார்
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் குருக்கள் என பொய் கூறி பக்தர்களை ஏமாற்றி மோசடி செய்த புரோகிதரின் உரையாடல் ஆடியோ பரவுகிறது. இந்த போலி குருக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேஸ்வரம் பிராமணர்கள் சங்கத்தினர் புகார் செய்தனர். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் உள்ள புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்வார்கள். மேலும் பாரம்பரியமிக்க மடம் மற்றும் புரோகிதர்களின் வீடுகளில் தில ஹோமம், ருத்ரஜெப ஹோமம், பரிகாரதோஷ ஹோமம் செய்வது வழக்கம். இந்நிலையில், கோயில் குருக்களாக இல்லாத வட மாநிலத்தை சேர்ந்தவரும், ராமேஸ்வரத்தில் பல ஆண்டுகளாக வசிக்கும் புரோகிதர் கிருஷ்ணா பாண்டே தனியாக வீட்டில் புரோகிதம் செய்து வருகிறார். இவர், பக்தர் ஒருவரிடம், தான் கோயிலில் குருக்களாக பணிபுரிவதாக பொய் கூறியுள்ளார். சிறப்பு பூஜைக்கு அதிக கட்டணத்தை சொல்லியும், அக்னி தீர்த்த கடற்கரையில் உள்ள புரோகிதர்கள் பிற ஜாதியினர், அவர்கள் பிராமணர்கள் இல்லை எனவும் கூறும் ஆடியோ பரவுகிறது. இதற்கு ராமேஸ்வரம் பிராமணர்கள் சங்கம், அக்னி தீர்த்த புரோகிதர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பிராமணர் சங்க தலைவர் ராஜன் கோயில் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரில், 'கிருஷ்ணா பாண்டே பல ஆண்டுகளாக பாரம்பரியமாக பூஜை செய்யும் புரோகிதர்களை அவதுாறாக பேசி களங்கம் ஏற்படுத்தி வருகிறார். இது பக்தர்களிடம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இவரை அழைத்து விசாரிக்க முயன்ற போது அடையாளம் தெரியாத இருவர் வந்து மிரட்டி சென்றனர். எனவே பக்தர்களை ஏமாற்றும் கிருஷ்ணா பாண்டே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.