திருப்புல்லாணியில் முக்கிய மூன்று அம்ச கோரிக்கையை நிறைவேற்றுங்க
திருப்புல்லாணி: திருப்புல்லாணி யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று முக்கிய அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு தொடர் கோரிக்கை எழுந்துள்ளது. எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாவட்ட முன்னாள் தொகுதி தலைவர் அப்துல் வஹாப் கூறியதாவது:திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் பற்றாக்குறையால் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி மற்றும் செயல்முறை கல்வி இல்லாத நிலை உள்ளது.இதனால் ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.எனவே மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை ஏற்படுத்த வேண்டும். கடந்த 2023ல் இடித்து அகற்றப்பட்ட திருப்புல்லாணி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் உள்ள கட்டடம் தற்போது வெற்றிடமாகவே உள்ளது. கோயில் அருகே இடவசதி குறைவான இடத்தில் செயல்படுகிறது.கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட 10 மீன் கடைகள் தற்போது வரை எவ்வித பயன்பாடில்லாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கலெக்டரிடம் தொடர்ந்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.எனவே திட்டங்களை வலியுறுத்தி கவன ஈர்ப்பு தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் விரைவில் நடக்க உள்ளது என்றார்.