ஆனந்துாரில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் நெல் விதைப்பு செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனந்துார், ராதானுார், திருத்தேர்வளை, நத்தக்கோட்டை, கூடலுார், மேல்பனையூர், ஏ.ஆர்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நெல் விதைப்பு செய்யப்பட்டது. நெல் விதைப்பு செய்த பின் விதைப்புக்கு ஏற்ற பருவமழை இல்லாததால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை பெய்த கன மழையால் விதைப்பு செய்த நெல் வயல்களில் நெல் முளைப்பதற்கு ஏற்ற ஈரப்பதம் நிலவியதுடன் ஒரு சில பகுதிகளில் வயல்களில் மழை நீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் விதைப்பு செய்த வயல்களில் உள்ள நெல் விதைகள் ஒரு சில நாட்களில் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் காற்றுடன் கூடிய மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடந்த சில வாரங்களாக ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் நேற்று பெய்த கனமழையால் மகிழ்ச்சியடைந்தனர்.