விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு வழங்காத காப்பீடு நிறுவனம் ரூ.16.10 லட்சம் வழங்க உத்தரவு
ராமநாதபுரம்: டூவீலர் விபத்தில் உயிரிழந்தவர் வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனம், கூடுதலாக ரூ.1 லட்சத்துடன் ரூ.16 லட்சத்து 10 ஆயிரம் வழங்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் குறை தீர்மன்றம் உத்தரவிட்டுள்ளது.பாம்பன் அருகேயுள்ள தங்கச்சிமடம் முஸ்லிம் தெருவை சேர்ந்த அப்துல் அஜீஸ் மனைவி ரகுமத்நிஷா 43. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன் முகமது மஹதீன் ராமேஸ்வரத்தில் சிக்கன் கடை வைத்திருந்தார். இவர் தனது டூவீலரில் 2022 செப்., 13ல் ராமேஸ்வரத்திலிருந்து வீட்டிற்கு டூவீலரில் வந்த போது எதிரே வந்த மினி சரக்கு வாகனம் மோதிது. டூவீலருக்கு பின் வந்த ேஷர் ஆட்டோவும் டூவீலரில் மோதியதில் முகமது மஹதீன் பலியானார்.இவர் தனது வாகனத்திற்கு சோழமண்டலம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தார். இதன் படி இழப்பீடாக முகமது மஹதீன் வாரிசுகளுக்கு ரூ.15 லட்சம் வழங்க வேண்டும். இதனை காப்பீடு நிறுவனத்திடம் ரகுமத் நிஷா இழப்பீடு கோரி விண்ணப்பித்தும், உரிய ஆவணங்களை வழங்கியும் இழப்பீடு தரவில்லை.ரகுமத் நிஷா மாவட்ட நுகர்வோர் குறை தீர் மையத்தில் வழக்கு தொடுத்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சேக் அப்துல்லா ஆஜராகினார். வழக்கினை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறை தீர்மன்றத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன், உறுப்பினர் குட்வின் சாலமோன்ராஜ் சோழமண்டலம், ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் இறந்தவருக்கு இழப்பீடாக ரூ.15 லட்சமும், கூடுதலாக ரூ.ஒரு லட்சமும், வழக்கின் செலவு தொகை ரூ.10 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டனர்.