உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முருகன் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்; இன்று திருக்கல்யாணம் 36 முறை கந்தசஷ்டி கவசம் பாராயணம்

முருகன் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்; இன்று திருக்கல்யாணம் 36 முறை கந்தசஷ்டி கவசம் பாராயணம்

ராமநாதபுரம்: கந்த சஷ்டி விழாவையொட்டி ராமநாதபுரத்தில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இன்று (அக்.,28ல்) திருக்கல்யாணம் நடக்கிறது. ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி மற்றும் வழிவிடுமுருகன், பெருவயல் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோயில்களில் அக்.,22 முதல் கந்தசஷ்டி விழா நடக்கிறது. இவ்விழாவில் நேற்று கந்த சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயிலில் காலை 9:30 மணிக்கு துவங்கி மதியம் வரை 36 முறை தொடர் கந்தசஷ்டிக் கவசம் பாராயணம் நடந்தது. அதன் பிறகு மாலை 6:30மணிக்கு ராஜா பள்ளி மைதானத்தில் வாண வேடிக்கையுடன் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில், குமரய்யா கோயில், பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பட்டணம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர் கோயில் ஆகிய இடங்களில் அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. இன்று ( அக்.,28ல்) ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயில், பெருவயல் ரெணபலி முருகன் கோயில் ஆகிய இடங்களில் காலை 10:30மணிக்கு மேல் 11:40 மணிக்குள்ளும், குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயிலில் மாலை 6:30மணிக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. * ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து தங்க கேடயத்தில் ஸ்ரீ முருகன், வள்ளி, தெய்வானையுடன் புறப்பாடாகி கோயில் வடக்கு ரத வீதியில் எழுந்தருளினர். பின் அங்கிருந்த சூரனை சுவாமி முருகன் அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் நடத்த சூரசம்ஹாரம் விமரிசையாக நடந்தது. பின் சுவாமி முருகப்பெருமானுக்கு கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு கோயில் மேலவாசலில் உள்ள முருகன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். *திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதியில் நேற்று கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து அபிேஷகம் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வெள்ளி கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டார். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. மாலையில் சூரசம்ஹாரம் நடந்தது. அதனை தொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கந்தசஷ்டி கவசம் போன்ற முருகன் பக்திபாடல்களை பாடினர். * பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாலை மயில் வாகனத்தில் சக்திவேல் ஏந்திய படி முருகன் வீற்றிருந்தார். தொடர்ந்து வீதி வலம் வந்த முருகனை ஏராளமானோர் தரிசித்தனர். கோயில் முன்பு வைகை ஆற்றின் கரையில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சிங்கமுகன், கஜமுகன், அசுரன் மற்றும் சேவல் முகத்துடன் வந்த அசுரனை சக்திவேல் கொண்டு வதம் செய்தார். ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் அரோகரா கோஷம் முழங்க தரிசித்தனர். இதே போல் பாரதி நகர் மற்றும் பால்பண்ணை எதிரில் உள்ள முருகன் கோயில்களில் அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை மற்றும் மாலை நேரங்களில் இக்கோயில்களில் தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. *ரெகுநாதபுரம் அருகே தென்னம்பிள்ளை வலசையில் மயூரநாத சுவாமி மற்றும் குமரகுரு தாச சுவாமி கோயிலில் நேற்று மதியம் தென்னம்பிள்ளை வலசை வெங்கலத்து தர்ம முனிஸ்வரர் கோயிலில் இருந்து சூர பத்மன் புறப்பாடும், பராசக்தி அம்மனிடம் இருந்து சுப்பிரமணிய சுவாமி சக்திவேல் பெற்று மயூரநாதர் சுவாமி கோயில் வளாகத்தில் சூரனை வதம் செய்தார்.இன்று வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது. * திருப்புல்லாணி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார விழா நடந்தது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்ஸவர் பாலசுப்பிரமணிய சுவாமி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார். * சாயல்குடியில் உள்ள வள்ளி தெய்வானை சமேத வழி விடு முருகன் கோயிலில் மாலை உற்ஸவமூர்த்தி எழுந்தருளி சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:00 மணிக்கு வேலுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் திருக்கல்யாண உற்ஸவமும், பகலில் அன்னதானமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.--------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி