கண்மாயை பறவைகள் சரணாலயத்திற்கு ஒப்படைக்கக் கூடாது: மக்கள் கோரிக்கை
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு கிராம ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மேல காஞ்சிரங்குளம் கண்மாயை ஒப்படைக்கக் கூடாது என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். முதுகுளத்துார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது.மேலக்காஞ்சிரங்குளம்பறவைகள் சரணாலயத்துடன் இணைக்கப்படுவதாக இருந்தது. கீழக்காஞ்சிரங்குளம் ஊராட்சி சார்பில் கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கண்மாயை சரணாலயத்திற்கு ஒப்படைக்க கூடாது என்று பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி தலைவர் சண்முகவள்ளி கூறியதாவது: கீழக்காஞ்சிரங்குளம்பறவைகள் சரணாலயத்திற்கு அதிகளவில் பறவைகள் வருவதில்லை. நீர் வழித்தடங்களும் முறையாக இல்லாததால் தண்ணீர் வருவதில்லை. சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இதனால் வறண்ட பூமியாகவே உள்ளது.வனத்துறையினரும் முறையாக பறவைகள் சரணாலயத்திற்கு எந்த பாதுகாப்பும் அளிப்பதில்லை. இங்குள்ள மேலக்காஞ்சிராங்குளம் கண்மாய் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இதை சரணாலயத்திற்கு ஒப்படைப்பதாக வந்த தகவலை அடுத்து ஊராட்சி சார்பில் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் பலமுறை ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கண்மாயை ஒப்படைக்கக்கூடாது என்று தீர்மானம்நிறைவேற்றப்பட்டு கலெக்டர், தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராமம் சார்பில் ரோடு மறியல், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.