புதுமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய் தோறும் செயல்படாத ஆய்வகம்
ராமநாதபுரம் : புதுமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செயல்படாத ஆய்வகத்தால் நோயாளிகள், கர்ப்பிணிகள் அவதிப்படுகின்றனர்.புதுமடம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியை சுற்றிலும் உள்ள கிராம மக்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பி வருகின்றனர். கர்ப்பிணிகள் தொடர் உடல் பரிசோதனைக்காக வருகின்றனர். தொடர் கண்காணிப்பில் உள்ள நோயாளிகளும் புதுமடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர். இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் ஆய்வகங்கள் இயங்குவதில்லை. இது குறித்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் விசாரித்த போது மின் விநியோகம் சரியாக இல்லை என்று ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக வெளியில் உள்ள தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வலியுறுத்துகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருபவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள். தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்யும் அளவிற்கு வசதியில்லாதவர்கள்.இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் முகமது பயாஸ்கான் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் புகார் தெரிவித்துள்ளார். புதுமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின் விநியோகத்தை சீரமைத்து அனைத்து நாட்களிலும் ஆய்வக சோதனைகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.