தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பி விவசாயப் பணி செய்ய முடியாமல் தவிப்பு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலக்கொடுமலுார் கிராமத்தில் உயரழுத்த மின்கம்பி தாழ்வாக செல்வதால் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தரிசு நிலங்களாக விடப்பட்டுள்ளது.மேலக்கொடுமலுார், கோனேரியேந்தல் கிராமத்திற்கு அபிராமம் துணைமின் நிலையத்தில் இருந்து மின்சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பத்தின் வழியாக மின்சப்ளை செய்யப்படுகிறது.இந்நிலையில் மேலக்கொடுமலுாரில் இருந்து கோனேரியேந்தல் கிராமத்திற்கு செல்லும் வழியில் விவசாய நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் உள்ள உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் விவசாய நிலத்தில் உழவுப் பணிகளை மேற்கொள்வதற்கு டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் கொண்டு செல்ல முடியவில்லை.இதனால் விவசாய நிலங்கள் தரிசாக மாற்றப்பட்டு வருகிறது. ஒருசில விவசாயிகள் அச்சத்துடன் விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பியை மாற்றியமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.